கரோனா பரவலைக் கண்டறிய மத்திய அரசு உருவாகியுள்ள 'ஆரோக்கிய சேது' செயலி உலகுக்கே முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் இருப்பதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு நிலையாக, மக்கள் தங்களது சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வழிவகுக்கும் சில செயலிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இதில் மிகமுக்கியமான செயலியாகத் தற்போது பார்க்கப்படுவது 'ஆரோக்கிய சேது' செயலி.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன்களில் இயங்கும் இந்தச் செயலியை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் 11 மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இந்தச் செயலியில்,அரசாங்க தரவுகளின்படி ஒவ்வொரு பகுதியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை குறித்த தரவுகள் தரப்பட்டுள்ளன. இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தும்போது, இந்தச் செயலி நமது அருகில் இருப்பவர்களின் தூரம் மற்றும் மக்கள் நெருக்கத்தை ஆராய்ந்து, நாம் இருக்கும் பகுதியில் கரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கூறும். பிரதமர் மோடியின் இன்றைய உரையிலும்கூட இந்த செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இந்தச் செயலியை உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கி சார்பில் ‘தெற்கு பொருளாதாரப் பார்வை' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், "கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது அவசியம். அந்தவகையில் இந்தியா வடிவமைத்துள்ள 'ஆரோக்கிய சேது' செயலி அதற்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.