போலீசாரிடம் சிக்காமல், துளிகூட சந்தேகம் வராமல் கொலை செய்வது எப்படி என்று கூகுளில் தேடி அதன்படி பெற்ற தாயையே இளம்பெண் ஒருவர் கொலை செய்து கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூரில் உள்ள கீழ்குளத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்-ருக்மணி தம்பதியினர். இவர்களுக்கு சந்திரலேகா என்ற பெண் உள்ளார். சந்திரலேகாவிற்கு திருமணம் முடிந்த நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதனால் தாய் வீட்டிலேயே வசித்து வந்தார் சந்திரலேகா. தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்த சந்திரலேகாவிற்கு 8 லட்சத்திற்கு மேல் கடன் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக அவரது தாய் ருக்மணியை மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் சந்திரலேகா. தனது தாயிற்கு மஞ்சள் காமாலை இருப்பதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ருக்மணியின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் ருக்மணி உயிரிழந்தார்.
அதனையடுத்து போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் அவரது உடலில் எலி விஷ மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து மகள் சந்திரலேகாவை போலீசார் விசாரித்தனர். மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபொழுது மெதுவாக, சிக்கிக் கொள்ளாமல் கொலை செய்வது எப்படி உள்ளிட்ட தலைப்புகளில் அவர் கூகுளில் சர்ச் செய்திருப்பது தெரியவந்தது. ,மேலும் இதுகுறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தாய் பெயரிலிருந்த வீட்டை தன் பெயரில் எழுதித்தர வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் அதற்கு தாய் ருக்மணி தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததால் தேநீரில் விஷம் கலந்து சந்திரலேகா கொலை செய்தது அம்பலமானது.