இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவுகளை புக் செய்யும் மக்களுக்கு டெலிவரி செய்து வரும் நிறுவனங்களில் முன்ணணியில் உள்ள நிறுவனமான 'ஸ்விகி' (SWIGGY) நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் அசைவம் மற்றும் நூடுல்ஸ் போன்ற மேற்கத்திய உணவுகளை தயாரித்து ஆன்லைன் மூலம் புக் செய்யும் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் தற்போது வீட்டு சாப்பாடுகளை விரும்புவதால், வீட்டு சாப்பாடுகளை தயாரித்து டெலிவரி செய்ய 'ஸ்விகி' நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கான மொபைல் ஆப்-யை ஸ்விகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் "டெய்லி ஸ்விகி" ஆகும். இந்த ஆப்பை முதன் முறையாக ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரில் அறிமுகப்படுத்தி 'வீட்டு சாப்பாடு" வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
பின்பு இந்த சேவை படிப்படியாக பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளது. சிறு வியாபாரிகள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் எனப் பலருக்கும் இந்த ஆப் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு எந்த மாதிரியான எந்த வகையான உணவுகள் வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மீல்ஸ் சாப்பாட்டின் குறைந்த விலை ரூபாய் 50 ஆகும். ஒரு நேரத்துக்கு என்றாலும் ஒரு மாதத்துக்கு என்றாலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் அவர்களுக்கான வீட்டுச் சாப்பாடு டெலிவரி இருக்கும் என ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது.