Skip to main content

‘இவ்வளவு கொச்சையாக பேசிய சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்புக் கேட்கக் கூடாது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
Supreme Court condemns CV Shanmugam

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்கலம் என்ற பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பேசும்போது, தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் அவதூறாகப் பேசியதாக அரசு வழக்கறிஞர் டி. சுப்ரமணியம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதே சமயம் கடந்த மே 1 ஆம் தேதி கோட்டக்குப்பம் என்ற இடத்திலும் சி.வி. சண்முகம் இதேபோன்று அவதூறாகப் பேசி இருந்தார். இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த இரு வழக்குகளும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணையை ரத்துசெய்யக்கோரி சி.வி.சண்முகம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு எப்படி கொச்சையாக பேச முடிகிறது?. சி.வி.சண்முகம் பேசிய விஷயத்தின் சில பகுதிகளை படித்து பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு மோசமான ஒரு பேச்சுக்காக சி.வி.சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?. நீங்கள் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதனால், வழக்கை ரத்து செய்ய முடியாது. உங்கள் தவறை உணராவிடில், இந்த விசாரணையை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்” என்று கூறி கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், ‘எதிர்காலத்தில் இதுபோன்று பேச மாட்டேன் என எழுதித் தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, உரிய பதில்களைப் பெற்று தருவதாக  சி.வி.சண்முகம் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்