டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் எனப் பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் அதற்கேற்ப புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கான முயற்சியில் பா.ஜ.க அரசு இறங்கியுள்ளது. வரும் 2022 -ஆம் ஆண்டுக்குள் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1,350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும், முக்கோண வடிவிலும் இந்தக் கட்டிடம் அமைய உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடங்களை அகமதாபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தயார் செய்தது. இதனையடுத்த, நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை டாடா புரொஜெக்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இந்நிலையில், டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டும்பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், மத்திய பொதுத்துறை பணிகள் அதிகாரிகள் ஆகியோர் நேற்று புதிய நாடாளுமன்றம் கட்டிடம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிற்கு கொடுத்த விளக்கத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின்படி, கட்டுமானப் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கி 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.