சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது செல்போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து, தன் மீது பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை நேரில் ஆஜராக சொல்லி விசாரணையை நடத்தியதில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தான் பார்த்ததாக அந்த இளைஞர் ஒப்புக்கொண்டார். அப்போது, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல, அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் என்ற வாதங்களை ஏற்றுக்கொண்டதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி வெங்கடேஷ், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்த்த அந்த இளைஞருக்கான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பு, பல்வேறு தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் தரப்பில் மேல்முறையீடு செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும்? இது கொடுமையானது. தனி நீதிபதி வெங்கடேஷின் கருத்துகளும் தீர்ப்பும் தவறானது என்று குறிப்பிட்ட அந்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், அதனை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான படங்கள் என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.