இந்தாண்டு நடைபெற்ற 15ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
15ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதி முடிவுற்றது. இந்தாண்டிற்கான சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. இந்த நிலையில், 15ஆவது ஐபிஎல் சீசன் தொடரின் முடிவுகள் மோசடியாக மாற்றப்பட்டிருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டாடா ஐபிஎல் தொடரின் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற எண்ணம் புலனாய்வு அமைப்பினர் மத்தியில் பரவலாக உள்ளது. இது தெளிவுபடுத்தப்பட வேண்டும். அமித் ஷாவின் மகன் பிசிசிஐயின் அறிவிக்கப்படாத சர்வாதிகாரியாக இருப்பதால் அரசு இதைச் செய்யாது. எனவே பொதுநல வழக்குகள் தொடரப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.