ரயிலில் இருந்து இறங்கும் பொழுது கால் இடறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக் கொண்ட பள்ளி மாணவியை ரயில்வே காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து பத்திரமாக மீட்டனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே துவ்வாடா ரயில் நிலையம் உள்ளது. குண்டூர் ராயகடா பயணிகள் ரயில் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது. ரயிலில் வந்த மாணவி ஒருவர் ரயிலில் இருந்து இறங்கும்போது கால் இடறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
இதனைக் கண்ட மக்கள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் ரயிலை நிறுத்தி வைத்து மாணவியை மீட்டனர். இடுப்பில் காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவியை காப்பாற்றிய காவல் அதிகாரி கூறுகையில், “மாணவி வேகமாக ரயிலிலிருந்து இறங்க முற்படும் போது கால் இடறி குறுகிய இடைவெளியில் விழுந்து எதிர்பாராத விதமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். காப்பாற்றும்படி அழுதுள்ளார். உடனடியாக உடன் வந்த பயணிகள் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி ரயிலை நிறுத்தினர். ரயில்வே காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார்” என்றார்.