
நேற்று (10/03/2025) நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. 'மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது' என திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழி நடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (un democratic, uncivilized) என இருமுறை குறிப்பிட்டார். மேலும், ''சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை மத்திய அமைச்சர் திரும்பப் பெற்றார். பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது பல இடங்களில் அவரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த தமிழக எம்பிக்கள் மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடையில் வந்திருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மும்மொழி கொள்கையை தினிப்பதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (11/03/2025) திமுக எம்.பி.க்கள் மற்றும் தமிழ்நாடு கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற முகப்பில் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மாணவர்களின் உரிமையை பறிக்காதே எனப் பதாகைகளை ஏந்தியும், மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என கோஷங்களை எழுப்பியும் முழக்கமிட்டனர்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை மறுப்பதா? சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2152 கோடி நிதியை தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஒன்றிய அமைச்சர் 'தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கேள்' எனும் பதாகையும் ஏந்தியிருந்தனர்.