மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், ஹரியான, இமாச்சல் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், தெலுங்கானா உட்பட 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக ஆளும் ஹரியானா, இமாச்சல பிரதேச மாநில இடைத்தேர்தலில் அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிகைத் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது; “நாட்டு மக்களை அடக்கி ஒடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது. சர்வாதிகாரத்தை நோக்கி அரசு சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருகிறது. அவர்கள் இந்நாட்டை விற்க விரும்புகிறார்கள். பணவீக்கமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. மக்கள் இவர்களின் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இமாச்சல் மற்றும் ஹரியானாவில் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. இது எங்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. இதனால் பாஜகவை நாட்டு மக்கள் நிராகரிக்கத் தொடங்கவிட்டனர் எனத் தெரிகிறது. அதற்கான முன்னோட்டம் தான் இந்த இடைத்தேர்தல் முடிவு. இமாச்சல பிரதேசம் மற்றும் ஹரியானாவில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியை அவர்களால் வருத்தப்பட்ட மக்கள் பரிசாக அளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து தெரிவித்த ராகேஷ் டிகைத், “மத்தியப் பிரதேசத்தில் எங்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம், ஏனெனில் பாஜகவின் வெற்றி தந்திரமானது” என்று தெரிவித்துள்ளார்.