2024 மக்களைவைத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதே தயாராகத் துவங்கிவிட்டன. அந்தவகையில், தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தியைச் சந்தித்தார். இந்த சந்திப்பையடுத்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பின் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்றும், காங்கிரஸில் தனக்குத் தேசிய அளவிலான பொறுப்பைக் கேட்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்தச்சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல் வீட்டில் கொண்டாடப்பட்ட கோகுலாஷ்டமி விழாவில் சந்தித்துக்கொண்ட காங்கிரஸ் தலைமையின் மேல் அதிருப்தியில் இருக்கும் ஜி-23 தலைவர்கள், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது குறித்து விவாதித்ததாகவும், அப்போது பிரசாந்த் கிஷோருக்குக் காங்கிரஸில் முக்கிய பொறுப்பினை வழங்கச் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதேநேரத்தில் சிலர் ஆதரவும் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.
இதனையடுத்து இந்த விவகாரத்தில் அடுத்து நடக்கவிருப்பது குறித்துப் பொறுத்திருந்து பார்க்கலாம் என ஜி-23 தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறின. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பொறுப்பு வழங்குவதற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும், அதேநேரத்தில் பிரசாந்த் கிஷோர் தலைமையில் தேர்தலுக்கான வியூகங்களை அமைக்கத் தனியாக ஒரு பிரிவை உருவாக்கலாம் என மூத்த தலைவர்கள் கூறுவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் இணைப்பது தொடர்பாகக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிரசாந்த் கிஷோருக்கு வழங்கப்படும் பதவி குறித்து சோனியா காந்தியே இறுதி முடிவெடுப்பார் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.