2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. முதலில் மம்தாவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் தொடங்கிய இந்தப் பணியைத் தற்போது காங்கிரஸ் தொடர்ந்துவருகிறது.
அந்த வகையில், கடந்த மாதம் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொளி வாயிலாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தினார். இதில் மு.க. ஸ்டாலின், உத்தவ் தாக்கரே, சரத்பவார், மம்தா பானர்ஜி, ஹேமந்த் சோரன், சீதாராம் யெச்சூரி எம்.பி. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோணி, டி. ராஜா, பரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சோனியா காந்தி, "தேர்தலுக்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும்.நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே சிந்தனையில் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளைக் கண்டித்து, செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை நடத்தவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், தேசிய பிரச்சனைகளில் நீடித்த போராட்டத்தை நடத்த திட்டமிடுவதற்காக, திக்விஜய் சிங் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார்.