கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.