
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். பெகாசஸ் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தையும் அவர்கள் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
இந்தநிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு ராஜ்ய சபா எம்.பிக்களான டோலா சென், நாடிமுல் ஹக், அர்பிதா கோஷ், மவுசம் நூர், சாந்தா சேத்ரி, அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆகிய ஆறு எம்.பிக்களும் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காகவும், ஒழுங்கற்ற நடத்தைக்காகவும் இன்று (04.08.2021) ஒருநாள் மட்டும் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.