Skip to main content

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து!

 

Another train accident in Odisha

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண வைக்கப்பட்டுள்ள நிலையில் 275 பேரில் 88 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை அடையாளம் காண சடலங்களின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இப்படி கடந்த சில நாட்களாக இந்தியாவையே உலுக்கியுள்ள இந்த கோர ரயில் விபத்து அரங்கேறிய அதே ஒடிசா மாநிலத்தில் தற்போது மற்றுமொரு ரயிலும் தடம் புரண்டுள்ளது.

 

ஒடிசாவின் பர்கார் பகுதியில் சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் வனப் பகுதியில் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் 5 முதல் 7 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட ரயில் விபத்தின் தடம் கூட இன்னும் மறையாத நேரத்தில் தற்போது மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !