ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370, 35A- ஐ நீக்கி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் துணை ராணுவப்படையை குவித்தது மத்திய அரசு. மேலும் காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகும், முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோரை வீட்டுக்காவலில் வைத்தது. அத்துடன் ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை பிறப்பித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஸ்ரீநகரில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்ய ஜம்மு- காஷ்மீர் சென்றார். ஆனால் அவரை, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியது ராணுவம். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசு, குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டார் என கூறியது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து பேசுவதற்காக இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகர் வந்தார். ஆனால் அவரும் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.