கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. இதில், குடிபோதையில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்த மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
மேலும் இது குறித்து விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தபோது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஏர் இந்தியா நிறுவனத்தின் குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனக்கு நேர்ந்த அவலத்தைக் கடிதம் மூலம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து சுமார் 40 நாட்களுக்கு மேலாகிய நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அந்த ஆண் பயணிக்கு அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் மிஸ்ரா மீது, பொது இடத்தில் ஆபாசமான செயல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில் இன்று பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சங்கர் மிஸ்ராவை அவர் பணியாற்றிவந்த அமெரிக்க நிறுவனமான வெல்ஸ் பார்கோ அவரை பணி நீக்கம் செய்துள்ளது. வெல்ஸ் பார்கோ நிறுவனத்தின் இந்திய வணிகப் பிரிவின் துணைத் தலைவராக சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.