இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 10 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவிற்கு நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரமெங்கும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது; கட்டடங்கள் நிலைகுலைந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச போலீஸ்காரர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பரெய்லி பகுதியைச் சேர்ந்தவர் சுகைல் அன்சாரி. இவர் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் லக்கிம்பூர் பகுதியில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு அங்கு நகரக் காவலராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதில் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் நன்கொடை கோரியும் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான பதிவு காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து, அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவிட்டார். மேலும், அந்த காவலருக்கு ஏதேனும் அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.