உலகெமெங்கும் அச்சுறுத்திவரும் கரோனவைக் கட்டுப்படுத்த, இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதுக்கும் மேற்பட்டோருக்கே செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கனடா, 12 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பைசர் கரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதியளித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரித்துவரும் இந்திய நிறுவனமான பாரத் பயோ-டெக் நிறுவனம், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் மீது, கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது, மூன்றாவது கட்ட ஆய்வக பரிசோதனைகளை நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில், 2-18 வயதுடையோர் மீதான ஆய்வுக்கு மத்திய அரசின் நிபுணர் குழு அனுமதியளித்துள்ளதாக நிபுணர் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, 18 வயதுக்கும் கீழுள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.