உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோகா சட்டமன்றத் தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏவாக மெகபூப் அலி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். முன்னாள் அமைச்சரான இவர், பிஜ்னோர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று முன் தினம் (29-09-24) கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்கள் தொகையால், உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும். முகலாயர்கள் 850 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர் என்பதை நாட்டை எரிப்பவர்கள் கவனிக்க வேண்டும். அதற்கு மக்கள், பாராளுமன்ற தேர்தலில் பதில் அளித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2027 சட்டமன்ற தேர்தலில், உங்கள் ஆட்சி நிச்சயமாக முடிவுக்கு வரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்று பேசினார். மெகபூப் அலியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.