Opposition to opening incomplete Rama temple and  Shankaracharyas who ignored the ceremony

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பை நிராகரித்திருந்தனர். அதேபோல், அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு முன்னதாக, இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என பூரிகோவர்த்தன் மடத்தின் மடாதிபதி நிச்சலானந்த சரஸ்வதி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, “எனது பதவியை கண்ணியத்தை உணர்ந்ததால் அயோத்தி விழாவை நான் தவிர்க்கிறேன். ராமர் சிலையை மோடி திறந்து வைக்கும்போது, நான் அங்கு நின்று கைதட்ட வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் 4 சங்கராச்சாரியார்கள்கலந்துகொள்ள மாட்டார்கள் என உத்தரகாண்ட் ஜோதிடர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்ஸேவரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நானும், கோவர்தன் மடம், சிருங்கேரி சாரதா பீடம், துவாரகா சாரதா பீடத்தை சேர்ந்த நான்கு சங்கராச்சாரியார்களும் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டோம். ராமர் கோவில் திறப்புவிழா சாஸ்திர விதிகளின்படி நடக்க வேண்டும் என்பதே சங்கராச்சாரியார்களின் விருப்பம். ஆனால், அயோத்தியில் சாஸ்திர விதிக்கு எதிராக நடத்தப்படுகிறது.

Advertisment

கோவில் கட்டுமானம் இன்னும் நிறைவடையவில்லை. அவசர அவசரமாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன?அரசியல் லாபத்திற்காக மட்டுமே அரைகுறையாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறக்கப்படுகிறது. முழுமையடையாத கோவிலை கும்பாபிஷேகம் செய்வது அறியாமையின் செயல். இதை சொன்னால், எங்களை எதிரி என்கிறார்கள். நாங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிரானவர்களாக இருக்கக்கூடாது. அயோத்தி விழாவில் பங்கேற்காத நான்கு சங்கராச்சாரியார்களின் முடிவை மோடிக்கு எதிரானது என்று கருதக்கூடாது. அயோத்தியில் சாஸ்திர விதிகள் புறக்கணிக்கப்படுகிறது. கோவில் முழுமையடையாத நிலையில் கும்பாபிஷேகம் நடப்பது மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது” என்று கூறினார்.