
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இருப்பினும், இந்த திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இங்கு புதிய கல்விக் கொள்கையை திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் கூறி புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சையான சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் வாழ மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், காட்கோபர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பையாஜி ஜோஷி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மும்பைக்கு ஒரு மொழி கூட இல்லை. மும்பையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி மொழி உள்ளது. காட்கோபர் பகுதியின் மொழி குஜராத்தி. எனவே நீங்கள் மும்பையில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் மராத்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்தார்.
மாநில மொழியை ஊக்குவிப்பதற்காக, ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ வாரியங்களுடன் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மராத்தி மொழியை கட்டாயமாக்கியிருக்கும் நேரத்தில், ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்துக்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.