
கையில் பச்சை குத்தப்பட்டிருந்த ‘ஓம்’ என்ற வார்த்தையை ஆசிட் ஊற்றி எரித்து, சிறுமியை மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்த சிறுமி, கடந்த ஜனவரி 2ஆம் தேதி தையல்கடைக்குச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 ஆண்கள், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தங்களது காரில் ஏற்றி மயக்கமடையச் செய்தனர். அதன் பின்னர், அடையாளம் தெரியாத ஒரு இடத்திற்கு சிறுமியை கடத்திச் சென்று, ஒரு அறையில் அடைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், சிறுமி தனது கையில் ‘ஓம்’ என்று வார்த்தையை பச்சை குத்தப்பட்டிருந்ததை ஆசிட்டால் எரித்துள்ளனர். வலுக்கட்டாயமாக சிறுமிக்கு இறைச்சியை ஊட்டி, தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இந்த சோதனையை அனுபவித்த அந்த சிறுமி, கடந்த மார்ச் 2ஆம் தேதி அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பியுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட சல்மான், ஜுபைர், ரஷீத் மற்றும் ஆரிஃப் ஆகிய 4 மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சல்மானை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள நபர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.