நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் பொது காப்பீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். குறிப்பாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ஆவணங்களைக் கிழித்தெறிந்து முழக்கமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சக உறுப்பினர்களிடையே பரபரப்பு நிலவியது.
இதனிடையே, ராஜ்ய சபாவில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்.
நடப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவை 28 மணி நேரம் 21 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டது. பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை செயல்படாமல் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையின் செயல்பாடு 76 மணி நேரம் 26 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.