
சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 2024ம் ஆண்டிற்கான குற்ற வழக்குகளில் பதிவான வழக்குகள் அவற்றின் தன்மை, மற்றும் வகைப்பாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. 2023ஆம் ஆண்டில் பதிவான ஆதாயக்கொலை வழக்குகளின் எண்ணிக்கை 83 ஆக இருந்தது. அதேசமயம் 2024ஆம் ஆண்டில் இது 75 வழக்குகளாகும். இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் 8 வழக்குகள் (10%) குறைந்துள்ளன.
இதேபோல், 2023ஆம் ஆண்டில் பதிவான கூட்டுக்கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 133 ஆகவும். 2024ஆம் ஆண்டில் 110 வழக்குகளாகவும் உள்ளது. 2023ஆம் ஆண்டில் பதிவான கொள்ளை வழக்குகளின் எண்ணிக்கை 2212 ஆகவும், 2024 ஆம் ஆண்டில் 1839 வழக்குகளாகவும் உள்ளது. இதனால், 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் கூட்டுக்கொள்ளை மற்றும் கொள்ளை வழக்குகள் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு (இரண்டிலும் 17% குறைவு) குறைந்துள்ளது. இதேபோல், 2023 ஆம் ஆண்டை (17 ஆயிரத்து 788) ஒப்பிடும்போது 2024 இல் திருட்டு வழக்குகளின் எண்ணிக்கை (15 ஆயிரத்து 892 வழக்குகள்) குறிப்பிடத்தக்க அளவு (10.65%) குறைந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2024ஆம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. குறிப்பாகக் கொலை மற்றும் ஆதாயக் கொலை ஆகியவை குறைந்துள்ளன. இது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.