பள்ளி மாணவர் ஒருவர் திருடப்பட்ட தன் மிதிவண்டியைத் திருப்பி தந்து விடுமாறு நோட்டீஸ் ஒட்டி வருகிறார்.
கேரள மாநிலம் கொச்சியில் பாவல் ஸ்மித் என்ற இளைஞர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 23ம் தேதி கொச்சி கலூர் ஸ்டேடியம் அருகே நிறுத்தி வைத்திருந்த சைக்கிள் திருடுபோனது. திருடுபோன சைக்கிள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனினும் தன் கையாலேயே எழுதிய பதாகைகளைக் கொச்சி சாலைகளில் ஆங்காங்கு ஒட்டியுள்ளார்.
அதில் “சைக்கிள் எனது அப்பா என் பிறந்தநாளில் பரிசாக வாங்கிக் கொடுத்தது. அது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதை யாராவது திருடுவார்கள் என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை. நான் காவல்துறையிடம் சென்றேன். ஆனால் எனக்கு வேண்டுமான முடிவு கிட்டவில்லை. ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் எங்கள் பகுதிகளில் நிகழ்ந்துள்ளது. எனவே இதுபோன்ற பதாகைகளை வைக்கிறேன். எனது சைக்கிளை எடுத்துச் சென்ற நபர் மீண்டும் திரும்ப கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
சில நேரங்களில் சூழ்நிலை அவரை அவ்வாறு செய்ய வற்புறுத்தி இருக்கலாம். நான் அவர்களைக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எனது சைக்கிள் திரும்ப கிடைத்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. கொடுத்துவிடுங்கள்” என்று எழுதியுள்ளார். பதாகையில் எந்த இடத்திலும் சைக்கிளை எடுத்துச் சென்றவரை திருடன் என்று சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.