ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கடந்த 2008- ஆம் ஆண்டு 8 இடங்களில் தொடர் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 70 பேர் உயிரிழந்தனர். மேலும் 185- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கில் வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. மேலும், ஒருவரை வழக்கில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டது. இந்நிலையில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று (20.12.2019) அறிவித்துள்ளது. அதன்படி முகமது சயீப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமான் உள்ளிட்ட நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.