காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமர்நாத் யாத்திரை முடித்த பக்தர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்ப காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள், காஷ்மீர் மாநிலத்தில் தங்கி பயின்று மாணவர்கள் உட்பட அனைத்து வெளி மாநிலத்தவர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டது. இதற்காக ஸ்ரீ நகரில் இருந்து அதிக விமானங்களை இயக்க, மத்திய விமான போக்குவரத்து துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்திய விமானங்கள் ஸ்ரீநகர் விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானமும் காஷ்மீர் மாநிலத்திற்கு விரைந்தது.
அதே சமயம் ஜம்மு& காஷ்மீர் பகுதியில் ராணுவ வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மத்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் மாநில மக்கள் மற்றும் அம்மாநில எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய அரசின் முடிவுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் இந்திய எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 7 பாகிஸ்தானியர்களை இந்திய ராணுவம் நேற்று இரவு சுட்டு வீழ்த்தியது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசனை செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இல்லத்தில் இன்று மாலை 06.00 மணியளவில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஸ்ரீநகரில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு தேசிய மாநாட்டுத் தலைவர் பாரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை துரிதப்படுத்தக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார். மேலும் சுயாட்சி மற்றும் சிறப்பு அந்தஸ்தைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து கட்சிகள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.