ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நிஷாத் குமார் உயரம் தூண்டுதலில் வெள்ளி வென்றார்.
ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திரா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தினர். இந்நிலையில், இன்று மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதித்துள்ளார். அதேபோல் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ் கதூனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதித்த தங்கள் மாநில வீரர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அதன்படி, தங்கப்பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு ரூ .3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ .2 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ஒரு கோடியும் பரிசாக வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.