நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான் - 3 என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது சந்திரயான் - 3 நிலை குறித்து விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து சந்திரயான் - 3 தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது.
தற்பொழுது இஸ்ரோ விஞ்ஞானிகள் கொடுத்துள்ள அப்டேட்டின் படி சந்திரயான்-3 விண்கலம் தற்போது 41,963 கிலோ மீட்டர் X 226 கிலோ மீட்டர் சுற்று வட்டப் பாதையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வரும் சந்திரயான்-3இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும். அந்த இடத்தில் உந்துசக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்துவார்கள். அதற்கான பணிகளை இஸ்ரோ தற்பொழுது தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மின்கலத்தின் உயரத்தை இரண்டாவது முறையாக உயர்த்தும் நடவடிக்கை வெற்றியடைந்திருப்பதாகவும் விண்கலம் தொடர்ந்து நல்ல முறையில் இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சந்திரயான்-3 தொடர்ந்து விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.