
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ள நிலையில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பு மீட்புக் குழு சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், 'நாங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம். தமிழகம் வந்திருந்த அமித்ஷா தங்களை அழைத்து பேசாதது வருத்தத்தை அளித்தது' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஓபிஎஸ் எங்கள் கூட்டணியில் இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அன்னைக்கு உள்ள சூழ்நிலையில் அமித்ஷா வந்தது வேற விஷயம். அதன் பிறகு நண்பருடைய வீட்டிற்கு போனார். பிறகு அதிமுக கூட்டணி பேசி முடித்தார்கள். ஓபிஎஸ் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் பேச வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்கள். இன்று உள்ள சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தான் கட்சியினுடைய பொதுச் செயலாளராக இருக்கிறார்'' என்றார்.