Published on 04/05/2020 | Edited on 04/05/2020

ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த நகைக்கடைக்குள் சுமார் மூன்று மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரின் பையனூர் பகுதியில் உள்ள நகைக்கடை, ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு இருந்துள்ளது. இந்த பூட்டியிருந்த நகைக் கடையை தூய்மைப்படுத்த அதன் உரிமையாளர் திறந்தபோது, அங்கிருந்த அட்டைப்பெட்டி ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று சுருண்டு படுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த கடைக்காரர், வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பைப் பிடிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அப்போதுதான், அது முட்டையிட்டு அடைகாத்து வந்தது தெரியவந்துள்ளது. சுமார் மூன்று மீட்டர் நீளமும் 24 கிலோ எடையும் கொண்ட மலைப் பாம்பு, பெட்டிக்குள் வைத்து 19 முட்டைகளை அடைகாத்து வந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர், அந்த பாம்பையும், அதன் முட்டைகளையும் பத்திரமாக மீட்டனர்.