
மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனமும் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பும் ‘அதேகொம்’ பின்னகத்துடன் இணைந்து பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு பிரச்சாரம் புதுச்சேரி முழுவதும் செய்து வருகிறது. அதன்படி பாலின அடிப்படையிலான வன்முறை தடுப்பு கருத்தரங்கம் மக்கள் சமூக வளர்ச்சி நிறுவனத்தில் அதன் தலைவர் டாக்டர் மோகன சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
குடும்ப நல ஆலோசகர் வித்யா வரவேற்க, இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, குடும்ப வன்முறை தடுப்பு அதிகாரி சித்ரா பிரியதர்ஷினி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அதேகொம் பின்னகத்தின் நிர்வாக அறங்காவலர் லலிதாம்பாள், வழக்கறிஞர் ஜெயந்த் ஜிப்மர், சமூக சேவை அதிகாரி சித்ரலேகா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், குடும்ப நல ஆலோசகர் பத்மாவதி, அருணகிரி ரவிச்சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பெண்களுக்கு ஏற்படும் பாலின அடிப்படையிலான பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது; பாலின பிரச்சனைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு எவ்வாறு நிவாரணம் பெறுவது உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக வளர்ச்சி நிறுவன ஊழியர் செல்வி பிரவீனா உட்பட பலர் செய்திருந்தனர்.