தங்கள் உணவகத்திற்கு வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக உணவகம் ஒன்று வெளியிட்ட அறிவிப்பு, அந்த உணவகத்தை நோக்கி ஏராளமான வாடிக்கையாளர்களைப் படையெடுக்க வைத்துள்ளது.
கரோனா பாதிப்பால் துவண்டு போயிருந்த தனது உணவக வியாபாரத்தை மீட்டெடுக்கும் வகையில், புதிய போட்டி ஒன்றை அறிவித்து வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது புனேவில் உள்ள உணவகம் ஒன்று. மகாராஷ்ட்ரா மாநிலம், புனே அருகே வாட்கான் மாவல் பகுதியில் அமைந்துள்ள சிவ்ராஜ் ஹோட்டல், அண்மையில் வாடிக்கையாளர்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி, அந்த உணவகத்தில் விற்பனை செய்யப்படும் 'புல்லட் தாலி' எனப்படும் உணவை ஒரு மணிநேரத்திற்குள் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்ஃபீல்ட் பைக் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ரூ.2,500 விலையுடைய இந்த புல்லட் தாலியில், 4 கிலோ மட்டன் மற்றும் வறுத்த மீன்களால் செய்யப்பட்ட சுமார் 12 வகையான உணவுகள் பரிமாறப்படும். வறுத்த மீன், சிக்கன் தந்தூரி, உலர் மட்டன், கிரே மட்டன், சிக்கன் மசாலா மற்றும் இறால் பிரியாணி உள்ளிட்டவை அடங்கிய இந்த தாலியை ஒருமணி நேரத்திற்குள் உண்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், இப்போட்டியில் பங்கேற்க ஏகப்பட்ட பைக் பிரியர்கள் இந்த உணவகத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்ட்ராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சோம்நாத் பவார் என்பவர் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை பரிசாக வென்றுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் அதுல் வைகர் தெரிவித்துள்ளார்.