காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் "காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதையை கொடுப்பதில்லை எனவும் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருப்பதாகவும் ராகுல் காந்தியே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக கடுமையாக விமர்சித்திருந்தார்.
சில தினங்கள் முன் குலாம் நபி ஆசாத் விரைவில் தனி கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார். இது குறித்து கூறிய அவர் "தனது கட்சியின் முதல் பிரிவு ஜம்மு காஷ்மீரில் தொடங்கப்படும். காங்கிரசில் இருந்து விலகியது திடீரென எடுக்கப்பட்ட முடிவு இல்லை. மீண்டும் காங்கிரஸில் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. பாஜகவில் இணையப்போவதாக கடந்த மூன்று ஆண்டுகளாக பலரும் கூறி வந்தனர். அவர்களுக்கு நான் புதிய கட்சியை தொடங்கியதே பதில்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜம்மு விமான நிலையத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற குலாம் நபி ஆசாத் சைனி காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரத்தத்தாலும் வேர்வையாலும் உருவாக்கிய காங்கிரஸ் கட்சியை தற்போது களத்தில் காணவில்லை என்றும் காங்கிரசின் கட்சியின் அணுகுமுறைகள் கணினியிலும் சமூகவலைத்தளங்களில் மட்டுமே இருப்பதாக குற்றம் சாட்டினார்.
தான் தொடங்க இருக்கும் புதிய கட்சிக்கு இன்னும் பெயர் முடிவு செய்ய வில்லை என்றும் அந்த பெயர் இந்திய தன்மையை கொண்டு அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கும் என்றும் கூறினார். ஜம்முகாஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து தருவதே தான் தொடங்க இருக்கும் கட்சியின் நோக்கம் எனவும் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் முன்னாள் துணை முதல்வர் தாராசந்த் உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள் 64 பேர் கட்சியில் இருந்து விலகுவதாக தலைமைக்கு கடிதம் அனுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.