
முன்னாள் மாநகராட்சி பெண் உறுப்பினர் ஒருவருக்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் இரவு நேரத்தில் மெசேஜ் செய்துள்ளார். அதில், ‘நீ ஒல்லியாக புத்திசாலியாகவும் அழகாகவும் இருக்கிறாய், நீ திருமணமானவரா? இல்லையா?. உன்னை எனக்குப் பிடிக்கும்’ போன்ற மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இது குறித்து அந்த பெண் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, குற்றம்சாட்டப்பட்டவரை குற்றவாளி எனக் கூறி நீதிமன்றம் அவருக்கு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதித்தது. அதன்படி, அவர் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். இருப்பினும், இந்த தீர்ப்புக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர் மேல்முறையீடு செய்தார். அவர் அளித்த அந்த மேல்முறையீட்டு மனுவில், அரசியல் பகை காரணமாக இந்த வழக்கில் தான் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த மேல்முறையீட்டு மனு பிப்ரவரி 18ஆம் தேதி மும்பை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் நீதிபதி டினோஷி தோப்ளே கூறியதாவது, ‘இரவில் தெரியாத ஒரு பெண்ணுக்கு இது போன்ற செய்திகளை அனுப்புவது ஆபாசத்திற்குச் சமம். எந்தவொரு புகழ்பெற்ற திருமணமான பெண்ணோ, அல்லது அவரது கணவரோ இது போன்ற வாட்ஸ் அப் செய்திகளையும், ஆபாசப் புகைப்படங்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தால் சரியாகக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்’ எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீடு மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார்.