புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, ‘ புதுச்சேரியில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், கடந்த 5 ஆண்டுகளாக பால் விலை உயர்த்தப்படாத நிலையிலும் தற்போது பால் விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்தார்.
அதன்படி பால் கொள்முதல் விலை 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக (அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய்) உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். அதனை அடுத்து அனைத்து வகை பாலுக்கும் விற்பனை விலை 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்தார். புதுச்சேரி அரசின் பாண்லே நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் பால் 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சமன்படுத்திய பால் toned milk 36 லிருந்து 42 ரூபாயாகவும்,சிறப்பு சமன்படுத்திய பால் special toned milk 38 லிருந்து 44 ரூபாயாகவும், நிலைப்படுத்திய பால் standardized milk 42 லிருந்து 48 ஆகும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குப்பை வரி குறைப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்ததன் படி பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை எனக்கூறி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குப்பைக்கூடைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் முதல்வர் நாராயணசாமி, 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அதில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில்வரி, குப்பை வரி ஆகியவற்றை குறைப்பதாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன உறுப்பினர்கள் பேரவைக்குள் குப்பை தொட்டிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தனர்.