இந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதன்படி இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரான அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து, பிரியங்கா காந்தி மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக நேற்று முன்தினம் (28.11.2024) பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்றது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக பிரியங்கா காந்தி எம்.பி வயநாடு தொகுதிக்கு வந்தார். காங்கிரஸ் சார்பில் வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரியங்கா காந்தி, “உங்களிடம் இருந்து பாடம் கற்கவே நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் பிரச்சனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ள வந்துள்ளேன். இரவுத் தடை, மனித-விலங்கு மோதல், சுகாதாரச் சேவைகளின் அவசியம் மற்றும் சிறந்த கல்வி நிறுவனங்களின் அவசியம் பற்றி நிச்சயமாக எனக்குத் தெரியும். ஆனால் இவை அனைத்திற்கும் போராடவும், உங்களுடன் இணைந்து பணியாற்றவும், அவற்றை சரியாகப் புரிந்துகொள்ளவும் நான் இப்போது இங்கு வந்துள்ளேன். நான் உங்கள் வீட்டிற்கு வருவேன், நான் உங்களை சந்திப்பேன். எனது வீடு மற்றும் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும், உங்களுக்கான வலுவான எதிர்காலத்தை உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன். என்னை எம்.பி. ஆக்கி, உங்கள் அன்பைக் காட்டி, உங்கள் ஆதரவை அளித்து, எனக்கு வலிமையையும் தைரியத்தையும் தருகிறீர்கள். எனது பிரச்சாரத்தில் எனக்கு ஆதரவளித்த கேரளாவில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு கடந்த 5 ஆண்டுகளில் செய்த வளர்ச்சிப் பணிகளுக்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையை என் மீது வைத்துள்ளீர்கள்” என்று கூறினார்.