மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (27/03/2022) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியர்களின் திறன் உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைந்துள்ளது. வெளிநாடுகளில் இந்திய பொருட்கள் முன்பை விட அதிகளவில் கிடைக்கிறது. தமிழகத்தின் வாழைப் பழங்கள் சவுதி அரேபியாவில் கிடைக்கிறது. ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழம், ராஜா மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தில் விளைவிக்கப்படும் தானியங்கள் உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது" என்றார்.
மேலும், "சென்னையைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். 150- க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் அருண் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம், இது நம்முள்ளே பெருமிதத்தை நிரப்பியிருக்கின்றது. பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், அதாவது, 30 இலட்சம் கோடி ரூபாய் என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. முதன்முறையாகக் கேள்விப்படும் போது இது ஏதோ பொருளாதாரம் தொடர்பான விஷயமாகப் பட்டாலும், பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின் வல்லமை, பாரதத்தின் ஆற்றல் ஆகியவற்றோடு தொடர்புடைய விஷயம் இது. ஒரு காலத்தில் பாரதத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை பற்றிய புள்ளிவிவரம் ஏதோ 100 பில்லியன், சில சமயம் 150 பில்லியன், சில வேளை 200 பில்லியன் டாலர்கள் என்பது வரை இருந்திருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.