முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை புகாரை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் பிரஜ்வாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கர்நாடக மாநில போலிஸ் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் அவரது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.