உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுகிறது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசும்போது, “இந்தியா புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது; அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் புதிய சகாப்தம், நம்பிக்கை பிறந்துள்ளது; ஏராளமான தியாகங்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
நூற்றாண்டு கால தியாகங்களும் பொறுமையும் இன்று பலனளித்துள்ளது; ராமர் கோயில் திறப்பு மூலம் அடிமை மனநிலைக்கு முடிவு கட்டியுள்ளோம்; நமது தியாகத்தில் சில குறைபாடுகள் இருந்தன; தாமதமாக கோயில் கட்டியதற்காக ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புகிறேன்; யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல; கண்ணியமாக கிடைத்த வெற்றி; சட்டப்படியே ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது; நீதித்துறைக்கு நன்றி; ராமர் கோயிலுக்காக பாடுபட்ட கரசேவகர்களுக்கு நன்றி” என்றார்.