
தலைநகர் டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அங்குள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், அப்பள்ளியில் இறுதித் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்வை தவிர்ப்பதற்காக, சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் வந்த சிறுவன், அங்கிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ மூலம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். தேர்வை தவிர்ப்பதற்காக சிறுவன், கிட்டத்தட்ட 2,000 கி.மீ வரை பயணம் செய்துள்ளார். கிருஷ்ணகிரிக்கு வந்த சிறுவன், அங்குள்ள கட்டுமானத்தின் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்துள்ளார். அங்கு ஒரு தற்காலிக குடிசையில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையில், சிறுவனின் தந்தை கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று மகன் செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை அமைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் பெங்களூருக்கு சென்றுவிட்டதாக கண்டுபிடித்தனர்.
அதன்படி, விவரங்களைச் சேகரிக்க பெங்களூருக்கு போலீஸ் விரைந்தது. அங்கு நடத்திய விசாரணையில், சிறுவன் பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டில் இருப்பதை அறிந்தனர். இறுதியாக, கிருஷ்ணகிரியில் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்த சிறுவனை போலீசார் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.