
ஹரியானாவில் ஐந்து மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுடன் கடத்தப்பட்ட கண்டெய்னர் லாரியை நான்கு மணிநேரத்தில் காவல்துறையினர் தேடிப்பிடித்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்து பென்ஸ் கார்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை வழிமறித்த கும்பல் ஒன்று அதன் ஓட்டுநரை துப்பாக்கியை காட்டி மிரட்டி லாரியை கடத்தியுள்ளது. ஓட்டுனரை கயிற்றால் கட்டிபோட்டுவிட்டு லாரியை எடுத்து சென்றுள்ளனர். சாலையில் இதைக் கவனித்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
அப்போது நுஹ் மாவட்டத்தில் வசிக்கும் ரஸாக் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லாரி சென்றுக் கொண்டிருந்த தடம் கண்டறியப்பட்டது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த போலீஸார் கொள்ளைக் கும்பலை கைது செய்தனர். மேலும் லாரியில் இருந்த 5 கார்களையும் போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக கொள்ளைக் கும்பலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.