
கேரளாவில் தென்மேற்கு பருவமழைக்கு இன்றோடு உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயா்ந்துள்ளது. மத்திய வானிலை மையம் கன மழைக்கு 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும் எச்சரித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக கேரளாவை புரட்டி போடும் தென்மேற்கு பருவமழையால் மத்திய மற்றும் வடகேரளத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிக்காணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போல் தண்ணீரிலும் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று வரை 139 பேர் உயிரிழந்திருப்பதாக கேரளா அரசு அறிவித்தது. மேலும் இன்று அதிகாலையில் 6 போ் வெள்ளத்தில் சிக்கி இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயா்ந்துள்ளது. மேலும் முகாம்களில் தொற்று நோய் பரவி இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிர படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இன்று இந்தியா வானிலை மையம் கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழை, திருச்சூர், கோட்டயம், பத்தணம்திட்ட ஆகிய 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்டும் மேலும் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்டும் அறிவித்துள்ளது. இதனால் கேரளா மக்கள் மேலும் கன மழை அச்சத்தில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.