ஹரியானாவை சேர்ந்த விக்ரம் என்னும் பிரபல ரவுடியை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஹரியானா போலீஸ் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் எதிர்பாராத விதமாக ராஜஸ்தான் காவல்துறை வேறு ஒரு வழக்கில் விக்ரமை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்தது.இந்த விவரம் ஹரியானா காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது.எனினும் நள்ளிரவில் போலீஸ் உயரதிகாரிகள் இருக்கும்போதே போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பை உடைத்து 15 பேர் கொண்ட கும்பல் விக்ரமை மீட்டுச்சென்றது.

இது ராஜஸ்தான் காவல்துறைக்கு மிகப்பெரிய தலைகுனிவாக அமைந்தது. இதையடுத்து தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு கடந்த 1 மாதமாக இந்த கும்பலை ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர்.இதில் 13 பேர் கொண்ட கும்பலை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்து, அவர்களை பரபரப்பான மார்க்கெட் பகுதியில் 2 கிலோமீட்டர் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.சுமார் 100 போலீசார் அணிவகுத்து சென்ற இந்த நிகழ்வை பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க,அது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜட்டி பனியனுடன் அரை நிர்வாணமாக குற்றவாளிகளை போலீசார் சாலையில், அழைத்து சென்றதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.