டெல்லியைச் சேர்ந்தவர் இளம்பெண் தாரா சரண். இவர் மாடலிங் துறையில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் சலூன் கடைக்குச் சென்ற அவர், முடித்திருத்தம் செய்ய கூறியுள்ளார். தான் மாடலிங் துறையில் இருப்பதால் கவனமாக முடித்திருத்தம் செய்யுங்கள், அதிகமான அளவு முடியை கட் செய்துவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். அங்கிருந்த ஊழியரும் சரி என்று கூறி முடித்திருத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், கண்களை மூடி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தாரா, குறிப்பிட்ட நேர இடைவெளியில் கண்களைத் திறந்து பார்த்தபோது, தான் கூறிய அளவை விட அதிகப்படியான முடியை வெட்டியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் கூறியதைவிட ஏன் அதிகமான அளவு முடியைக் குறைத்தீர்கள் என்று கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் சரியான பதில் கூறாத நிலையில், அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார். முடி வெகுவாக குறைக்கப்பட்டதால், அவரது மாடலிங் வாய்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இதுதொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டார் தாரா சரண். வழக்கை விசாரித்த ஆணையம் தவறு செய்த சலூன் கடைக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.