புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன.
இது தொடர்பாக, பாடகி ரிஹானா, நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட சிலர் தெரிவித்தக் கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன. அதே நேரத்தில், பிறநாட்டுப் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு எதிராக, இந்தியப் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சச்சின், விராட் கோலி உள்ளிட்ட சிலர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் கூறிய கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியின் காசிப்பூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தலைமையேற்று வரும் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத், ‘விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த வெளிநாட்டினர் யாரென்று தெரியாது’ எனக் கூறியுள்ளார். பாடகி ரிஹானா உள்ளிட்டோர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்த வெளிநாட்டு கலைஞர்கள் யார்? அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்திருக்கலாம், ஆனால் எனக்கு அவர்களைத் தெரியாது" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், "சில வெளிநாட்டினர் எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்றால், என்ன பிரச்சினை. அவர்கள் எங்களுக்கு எதையும் கொடுப்பதில்லை அல்லது எங்களிடமிருந்து எதையும் எடுத்துச் செல்லவுமில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.