இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அண்மையில் பரிந்துரைத்தது. இந்தநிலையில், மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரைத்த அதே தேதிகளில் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை 19 நாட்கள் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் கரோனா விதிமுறைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்படுவர். ஆர்டி - பிசிஆர் சோதனை கட்டாயம் கிடையாது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களைக் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி வலியுறுத்துவோம் இரண்டு அவைகளும் காலை 11 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்" என தெரிவித்துள்ளார்.
இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேறவுள்ளன. அதேநேரத்தில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ரஃபேல் விவகாரம் ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் இந்தக் கூட்டத்தொடரில் அனல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.