இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளில் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்களில் இருந்து, மற்ற மாநிலங்களுக்கு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும், ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் அலுவலகம் இன்று (25/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும். புதிய உற்பத்தி நிலையங்களால் மருத்துவமனைகளுக்கு தடையில்லா ஆக்சிஜன் கிடைக்கும். இந்த ஆண்டின் துவக்கத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து ரூபாய் 201.58 கோடியில் 162 ஆக்சிஜன் நிலையங்கள் அமைக்க ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.