Skip to main content

இந்தியாவைப் போல நாங்களும் மதச்சார்பற்றவர்கள்! - வி.எச்.பி. நபருக்கு ஓலா பதிலடி

Published on 23/04/2018 | Edited on 23/04/2018

தான் புக் செய்த டாக்ஸியின் டிரைவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அதை ரத்து செய்துவிட்டு பின்னர் அதுகுறித்து பெருமையாக பதிவிட்ட வி.எச்.பி. நபருக்கு ஓலா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

 

Ola

 

விஷ்வ இந்து பரிஷித் என்ற இந்துத்வ அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர் அபிஷேக் மிஷ்ரா. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நேற்று லக்னோவில் இருந்து வெளியில் செல்ல ஓலா செயலி மூலமாக டாக்ஸி புக் செய்துள்ளார். வழக்கம்போல் டாக்ஸி எண், ஓட்டுநர் பெயர், மொபைல் எண் என அனைத்து விவரங்களும் ஓலா செயலி மூலம் அபிஷேக் மிஷ்ராவுக்கு அனுப்பப்பட்டது. 

 

அதில் ஓட்டுநரின் பெயரின் மூலம் அவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அபிஷேக், தான் புக் செய்த டாக்ஸியை கேன்சல் செய்துவிட்டு, இதுகுறித்து பெருமையாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். மேலும், ஜிகாதி மக்களிடம் என் பணம் போய்ச்சேருவதை நான் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்ட நிலையில், இந்தப் பதிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

இந்நிலையில், அபிஷேக் மிஷ்ராவின் ட்வீட்டுக்கு பதிலடி தரும்விதமாக ஓலா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம், ‘நம் நாட்டைப் போலவே ஓலாவும் மதச்சார்பற்றது. நாங்கள் எங்களோடு இணைப்பில் இருக்கும் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சாதி, மதம், இனம் மற்றும் சமயத்தின் பெயரால் பாகுபாடு படுத்திப் பார்த்ததில்லை. மேலும், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை எப்போதும் பிறருக்கு உரிய மரியாதை கொடுத்து நடத்துமாறு வலியுறுத்தி வருகிறோம்’ என பதிலளித்திருந்தது. ஓலாவின் இந்த பதில் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

சார்ந்த செய்திகள்